கள்ளமில்லா சிறு மழலை
முகம் பூக்கும்
புன்னகை போல்
உள்ளமெல்லாம்
எனைத்தேக்கி உயிர்குவிக்கும்
சிறு நகையில்
கள்ளிருக்கும் உதடுகளால்
கனி ஒழுகும் சொல்லெடுத்து
மந்திரமாய் என்னுள்ளே
மா என்றே ஒலிக்கவைத்தாய்..
மா!
என் மீதான
உன் உணர்வின்
ஒட்டுமொத்த அளவீடு..
மா..!
அதிகபட்ச அன்பின்
சர்வதேசக் குறியீடு
மா..!
உலக அழகியலின்
ஒருமித்த ஒலிவடிவம்
மா..!
என் அகம் புறம்
இரண்டையும் காட்டும்
அதிசயக் கண்ணாடி
ஒரு நொடிக்குள்
சுவர்க்கத்தைக்
கட்டி எழுப்ப இயலுமா?
முடியும் என்கிறது மா!
மனதை
உணர முடியும்
கேட்க முடியுமா?
முடியும் என்கிறது மா..!
மா..!
உன்
மனதின் வடிவம்..
நீ
மா சொல்லும் பொழுதுகளில்
நட்டு வைத்துப் போகிறாய்
சிறு சிறு பூங்காக்களை
நீ
மா உதிர்க்கும் தருணத்தைக்
காற்றின் அதிர்வுகளும்
கவனிக்கத் தவறுவதில்லை
அதனால்தான்
தென்றலாய் என்னுள்
பண்ணிசைத்துக் கொடுக்கிறது
உன்
மா! வில் புலர்கிறது
எனக்கான விடியல்
எங்கே!
மா சொல்லு
என் அணுக்கள் முழுக்க
வாசம் சுரக்கும்
மா..! சொல்லு
இதயம் இன்னும்
இளமையாகும்
மா..! சொல்லு
உயிரின் நீளம்
இன்னும் கூடும்
மா..! சொல்லு
உறவின் வேர்கள்
உலகை ஈர்க்கும்
உன் நிலை
அறிவிக்க
இந்த மா விற்குதான்
எத்தனை வடிவங்கள்!
மோகிக்கும் போது
உம் மா வில்
பரிதவிப்பின் போது
ஏம் மா வில்
ஆமோதிக்கும் போது
ஆ மா வில்
நான் கேலி பேசுகையில்
அம் மா வில்
நான் மெளனிக்கும்
மறுகணம்
என்னம் மா வில்
உன்
செல்லக் கோபத்தின்
போ மா வில்
என
எல்லா இடங்களிலும்
ஈறு கெடாத பெயரின்
உச்சமாய்
சொக்கி நிற்கிறது
இந்த மா..!
கிச்சி கிச்சி மூட்ட
கிளர்ச்சிகள் கூட்ட
உயிர்களை பூக்க
உணர்வுகள் ஆக்க
சிறகுகள் விரிக்க
சிந்தனை கொடுக்க
கனவுகள் விதைக்க
கவிதைகள் படைக்க
உலகைக் குடிக்க
அழகை வடிக்க
என்னை என்னை
மறுபடி மறுபடி
பிறக்கச் செய்துப்
புதுப் பொலிவாக்க..
எல்லாம் உந்தன்
மா..! வால் முடியும்..
மா..!
எனக்கான
காலக் கணக்கின்
கூட்டல் குறியீடு
மா..!
எனக்கான
மகிழ்வெளியின்
கிழக்கு சூரியன்
மா..!
எனக்கானக்
காட்சிப் பிழைகளின்
கடிவாளம்
மா..!
எனக்கான
வலிகளின்
ஒரே நிவாரணீ
மா..!
எனக்கான
மங்கல ஓசை
மா..!
என் உயிரின்
கடைசித் துளிக்கு
அதுவே
முற்றுப் புள்ளி..!
No comments:
Post a Comment