எப்படி சொல்வேன் உன்னை
நான் எங்ஙனம் சொல்வேன் பெண்ணே
இப்படியோர் புது வாழ்வு
நான் அடைந்திட்டதே பெரும் பேறு
செப்படி வித்தைகள் இல்லை - அன்பின்
செழுமைக்கு நீயே எல்லை
தப்படி உனை குறை சொல்தல் - என்
தாரமே நிறைமகள் நீயே..!
இப்புவி இருந்திடும் மட்டும்
என் இருதயத் துடிப்பினில் நித்தம்
ஒப்பிலா உன்பெயர் இசைக்கும் - அன்பை
ஓதிடும் வேதமாய் ஒலிக்கும்
அப்படியோர் மறை படைத்து -என்
ஆலயமாய் உனை நினைத்து
செப்பிடும் படி செய்திடுவேன்
உன் சேயன நான் உருகிடுவேன்..!
யாரடி என் மணவாட்டி
என ஏங்கிய நாட்களும் உண்டு
தேரடி ஊரடி என்று நான்
தேடியேத் தீர்த்ததும் உண்டு
வேரடி நீர்தொடும் விழுதாய் என்
வேனிற்காலப் பொழுதில்
ஓரடி எடுத்திடத் துணிந்தாய் என்
ஒருவனுக்காவேப் படர்ந்தாய்..!
தாயை நான் இழந்து
தடுமாறிய பொழுதுகளில்
தீயை நான் விழுங்கி
திசை மாறிய தருணங்களில்
தாயாய் எனைத் தழுவி உன்
தரமிகு மடி ஈந்து
சேயாய் எனை சேர்த்தாய் - உன்
சேலையிலே எனை சாய்த்தாய்..!
என்ன செய்திடுவேன் நான்
என்று இருக்கையிலே
எண்ணத் தீ மூட்டி நான்
எரிய நினைக்கயிலே
முன்னம் செய்வினையோ என்
முழுமுதற் தவப் பயனோ
உன்னை உளமெடுத்தேன் என்
உயிரின் நீட்சி கண்டேன்..!
இருளும் கூடத்தில் நான்
இயக்கம் அற்றுவிழ
உருளும் காலத்தை என்
உலகம் கொன்று விட
மிரளும் அச்சத்தில் என்
மீசை பலனிலக்க
உன் அருளால் ஒளியுணர்ந்தேன் என்
அகிலம் விரியக் கண்டேன்..!
உள்ளம் புரிந்தால்
உலகம் துளிர்க்கும்
கள்ளம் புகுந்தால்
கனியும் கசக்கும்
தெள்ளத் தெளிவாய்
எனைத் தெரிந்தாயே
வெள்ளம் மீட்டு எனை எடுத்தாயே
அள்ளிக்கொடுத்த அமுத சுரபியே
பள்ளிகொள்கிறேன் உன்
பார்வையின் மடியில்..!
மாயை சார்ந்த முகத்தை நான்
மனிதர் என்றே கண்டேன்
சாயம் போன மனதை நான்
சரித்திரக் குறிப்பென்றுரைத்தேன்
காயம் பட்ட பின்னர் என்
குட்டை கலங்கிடக் கண்டேன்
தூயவள் உன் துளி ஒன்றில்
'அ'சுத்தம் துலங்கிடப் பெற்றேன்..!
உன்னைப் பார்த்த பின்தான்
என்னைப் பார்த்து கொண்டேன்
என்னைப் பார்த்த பின்தான்
என்னில் ஏற்றம் கண்டேன்
கண்ணை தானம் செய்யும்
கனிவுள நெஞ்சம் போல
உன்னை தானம் செய்தாய் என்
உயிரே நீயும் வாழ்க..!

