கொக்குகளே.குருவிகளே
குற்றால அருவிகளே
பக்குவமா பாட்டு ஒன்னு
பாடுகிறேன் கேளுங்களேன்...
அக்கரையின் சீமையிலே
அழகின் வெள்ளாமையிலே
"அக்கறையின்" அர்த்தமென
ஆங்கொருத்தி எனக்கிருக்கா
மலையகத்தின் மாது அவள்
கலையழகின் தூது அவள்
விலைக்கேதும் ஒப்பில்லா
தலைவி அவள்,தாரமவள்
அறிவியலின் அதிசயமாம்
இணையவெளி பெரும் பரப்பில்
செறிவான குணங்களுடன்
சேர்ந்த புது சொத்து அவள்
அண்ணாவின் தேடல்தனில்
எந்நாளும் எனக்காக
பொன்னான ஓர்பொழுதில்
என்னோடு மனம்புகுந்தாள்
அன்னையவள் அன்பிற்கு
தன்னையவள் ஈடாக்கி
என்னையவள் சீராட்ட
இன்னுமொரு தாயானாள்
வெள்ளை மனம் நல்ல குணம்
கொள்ளை நிலா கொண்டமுகம்
வள்ளல் அவள் அன்பு நிதம்
அள்ள அள்ளக் குறையலியே
காலமெலாம் அவள் நினைப்பில்
கரைந்துவிட நான் நினைப்பேன்
ஞாலமது ஓய்ந்திடினும்
நான் அவளின் துணையிருப்பேன்...
No comments:
Post a Comment